
கண்ணாடி முன் நின்று
சீவி சிங்காரித்து ஒயிலாக சிரிக்கும் நீ
கண்கொட்டாமல் பார்க்கும் என்னை
செல்லச்சிணுங்கலுடன் மையிட்ட உன்
மான் விழிப்பார்வையில் ஓடுவது
வெட்கமா சிருங்காரமா மோகனமா
மகிழ்வுடன் புரியாமல் நான் தவிப்பேன்
இன்று குளிரூட்டிய கண்ணாடி
நீள்வடிவ பெட்டியினுள்
கண்களை இறுக மூடி
மீளாதுயில் கொண்டு,மீளா துயர் தந்து
அமைதியாக படுத்திருக்கும்
உன் முகத்தை கண் கொட்டாமல்
மனம் முழுக்க பாரமுடன்
நான் பார்க்கும் இவ்வேளை
உன் வதனத்தில் ஓடுவது
என்னென்று புரியாமல்
அழுகையுடன் தவிக்கின்றேன்.
சிரிக்க சிரிக்க நீ பேசி
என் சிந்தையை கவர்ந்தவளே
இன்று வாய் மூடி மவுனியாக
படுத்திருக்கும் நிலை கண்டு
சித்தம் கலைந்து நிற்கின்றேன்
வகை வகையாக சமையல் செய்து
தளிர் கரத்தால் பரிமாறி
வயிறு நிரம்ப வைத்தவளே
இந்நொடியில் அக்கரங்கள்
செயலிழந்து போனதுவே
வெள்ளிக்கொலுசொலிக்க
ஒய்யாரமாய் நடை நடந்து
ஓவியமாய் வலம் வந்த
உன் கால்விரல்கள் வெண் துணியால்
கட்டப்பட்டு இருக்கும் நிலை
கண்டும் நான் செய்வதறியேன்
இந்நொடியில் குளிர் பெட்டியினுள் நீ
நாளையோ வளியில்லா மண்ணறையில்
குளிரூட்டீய நம் அறையில் இனி
என்னை தனியாக தவிக்க விட்டு
மண்ணறையில் துயில் கொள்ள
பறந்து விட்டாயே என்னவளே
| Tweet | |||||
